25 ஆண்டுகள் கழகம் பயணித்த பாதை
1990 ஆம் ஆண்டு Stovner இல் விளையாட்டு ஆர்வலர்கள் சிலர் ஒன்றுகூடி கரப்பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார்கள். இவர்களது இந்த முயற்சியில் நாளடைவில் பலர் இணைந்துகொண்டனர். அத்துடன் பல போட்டிகளில் பங்குபற்றி வெற்றியும் பெற்றனர். 1993ஆம் ஆண்டு சில பெண்களின் முயற்சியினால் Nettball குழுவும் Stovner இல் உருவாக்கம் பெற்றது. 1994 ஆம் ஆண்டு ஆனி மாதம் சமுக ஆர்வலர்கள் சிலர் Rommensletta வில் ஒன்றுகூடினார்கள்.
வளந்தோற்கு மட்டுமன்றி எமது சிறார்களின் விளையாட்டையும் கருத்தில் கொண்டு ஒரு விளையாட்டுக்கழகத்தின் தேவை உணர்த்தப்பட்டது . அந்தக்கூட்டத்தில் உருவாக்கம் பெற்றதே STOVNER TAMIL SPORTS CLUB ஆகும். அதே கூட்டத்தில் கழகத்திற்கான நிர்வாகமும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து அந்த நிர்வாகத்தின் செயற்பாட்டினால் கழகத்திற்கான வர்ணங்கள் தெரியப்பட்டு கொடியும் உருவாக்கப்பட்டது. அத்துடன் கழகத்திற்கான சின்னமும் வரையப்பட்டது. இதே ஆண்டில் ஒஸ்லோ மாநகரசபையின் விளையாட்டுத்துறையில் கழகம் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பொருளாதார உதவி கோரி விண்ணப்பமும் கொடுக்கப்பட்டது. நிர்வாகம் மிகுந்த ஆர்வத்துடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டது. 1995ஆம் ஆண்டு முதலாவது மெய்வல்லுனர் போட்டி மிகவும் சிறப்பாக Rommensletta வில் நடைபெற்று தொடர்ந்து வருடாவருடம் மேலும் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது. வருடம் ஒரு முறை பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும் விருந்துபசாரமும் 1995ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருவதால் கழக அங்கத்தவர்களிடையிலான உறளவப் பலப்படுத்தியதுடன் அவர்களிடமிருந்து புதிய சிந்தனைகளையும் கருத்துக்களையும் பெறமுடிந்தது.
1995, 1996, 1997, 1998 ஆம் ஆண்டுகளில் எமது கழகத்தால் கரபந்தாட்டச் சுற்றுப்போட்டியும் மிகச்சிறப்பாக Linderud hall இல் நடாத்தப்பட்டது. எமது கழக வீர வீராங்கணைகள் கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் என பல துறைகளிலும் சாதனைகள் புரியத்தொடங்கினர். இந்தக்காலப்பகுதியில் டென்மார்க்கில் வசித்த சில உதைபந்தாட்ட வீரர்கள் எமது கழக வீரர்களுடன் இணைந்து விளையாடி எமது கழகத்திற்கு புகழ் சேர்த்தனர். இந்த வீரர்கள் அனைவருக்கும் கழகம் நன்றியைத் தெரிவிக்கின்றது.
இந்தக் காலகட்டத்தில்தான் கழகம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் வியக்கத்தக்க வகையில் பல வெற்றிகளைப்பெற்று பாரிய வளர்ச்சியடைந்தது. அத்துடன் புதிய அங்கத்தவர்ககளின் வருகையும் அதிகரித்தது. 1997ஆம்ஆண்டிலிருந்து எமது கழகம் இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட நம் உறவுகளுக்கும் தன்னாலான பங்களிப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கையில் கிளிநொச்சியில் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கவும் கழகம் பங்களிப்பு வழங்கியது.
நோர்வேயில் மட்டுமல்லாது , 2000 ஆம் ஆண்டிலிருந்து கழக வீரர்கள் Swiss, Denmark, UK ஆகிய நாடுகளில் இடம்பெறுகின்ற உதைபந்தாட்ட மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். இதனால் இந்த நாடுககளில் வாழும் தமிழர்கள் மத்தியிலும் எமது கழகம் பிரபல்யமடைந்தது.
2000 ஆண்டுகளில் எம்மை SWISS நாட்டிற்கு அழைத்து சகல வழிகளிலும் உதவிகள் புரிந்த சுவிஸ்தமிழர் இல்லத்தவர்களையும் நன்றியுடன் நிளனவுகொள்கின்றோம்.
2001ஆம்ஆண்டிலிருந்து எமது கழகம் «STOVNER CUP» என்ற பெயரில் 9, 12, 15 வயதுப்பிரிவினருக்கான உதைபந்தாட்டப் போட்டியினையும், தொடர்ந்து 2004ஆம் ஆண்டிலிருந்து 7, 9, 11, 13, 15, 17 மற்றும் OVERAGE பிரிவினருக்கும் மற்றும் Cricket, பெண்களுக்கான உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற போட்டிகளையும் நடாத்தி வருகின்றது.
கடந்த 10 ஆண்டுகளாக «STOVNER CUP» ஐரோப்பாவில் மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Swiss, France, Sweeden, UK, Denmark ஆகிய நாடுகளிலிருந்து பல கழகங்கள் «STOVNER CUP» இல் பங்குபற்றி சிறப்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளின்போது சிறந்த சிற்றுண்டிச்சாலையும் பலரது ஒத்துழைப்பினால் மிகச்சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. கடந்த 5ஆண்டுகளாக வாரம் ஒருமுறை பெண்களுக்கான உடற்பயிற்சியும் கடந்த 3ஆண்டுகைாக வாரம் ஒருமுறை பெண்களுக்கான நீச்சல்பயிற்சியும் நடைபெறுகின்றது.
வளர்ந்த ஆண்களுக்கான Innebandy, Football என்பனவும் வாரம் இரு முறை இடம்பெற்று வருகின்றது. எமது கழகம் தமிழர் விளையாட்டு விழா மற்றும் தமிழ்ச் சங்க மெய்வல்லுனர் போட்டிகளிலும் வருடாவருடம் பங்குபற்றி பல முறை கழகம் முதலிடத்தைப் பெற்று உள்ளது , அத்துடன் ஏனைய சக கழகங்களினால் நடாத்தப்படுகின்ற உதைபந்தாட்டப் போட்டிகளிலும் எமது வீரர்கள் கலந்துகொண்டு பல வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் (Swiss, UK, Denmark) நடத்தப்படுகின்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளிலும் பங்குபற்றி பல முறை எமது வீரர்கள் வெற்றிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று எமது வீரர்கள் நோர்வேயில் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்களாகவும், பயிற்றுவிப்பாளர்களாகவும் அத்துடன் நோர்வேயிய கழகங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களாகவும், கல்வியிலும் தொழிலிலும் சிறந்து விளங்குவது எமக்கு பெருமையளிக்கின்றது. எமது கழகம் அங்கத்தவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக மட்டுமன்றி நற்பண்பு கொண்டவர்களாகவும் உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டு வருகின்றது.
கழகம் தனக்கென ஒரு அலுவலகத்தை 2018 ஆம் ஆண்டிலிருந்து STOVNER இல் பெற்று செயற்பட்டு வருகின்றமையும் கழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாகும்.
கழகத்தின் வெள்ளிவிழா «Stovner cup 2019» இந்த ஆண்டு மிகச்சிறப்பாக நடைபெற்று அனைவரதும் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. கழகம் இன்று அதிக அங்கத்தவர்களைக் கொண்ட சிறந்த தமிழர் விளையாட்டுக்கழகமாக திகள்கின்றது. அத்துடன் பல நூற்றுக்கைக்கான விளையாட்டு வீரர்களையும் சமுகநலன் விரும்பிகளின் உதவிகளினாலும் கழகம் சிறப்பாக செயற்பட்டு இன்று வெள்ளிவிழா காணுவதையிட்டு அகமகிழ்வடைகின்றோம்.
சதானந்தன் ஆனந்தகரன்